வேலூர் மாவட்டத்திலுள்ள பிரபலமான கோவில்களில் முக்கியமானது வள்ளிமலை முருகன் கோவில். இந்த கோவிலின் அறங்காவலர் குழுவின் தலைவராக தி.மு.க.வின் ராணிப்பேட்டை மாவட்ட பொருளாளர் சாரதி நியமிக்கப்பட்டுள்ளார். இது வேலூர், ராணிப்பேட்டை தி.மு.க.வினரிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆற்காட்டை சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர், "கடந்த 2021 வரை அ.தி.மு.க.வில் வர்த்தகர் அணி மாவட்டச் செயலாளராக இருந்ததோடு, அ.தி.மு.க.வில் அமைச்சர் வீரமணியின் பினாமியாக தேர்தல் வேலைகளை செய்தவர் சாரதி. ஆற்காடு தொகுதி உனக்குத்தான் என அப்போதைய அ.தி.மு.க. அமைச்சர் வீரமணி உறுதி தந்திருந்தார். 2021 தேர்தலின்போது ஆற்காடு தொகுதி பா.ம.க.வுக்கு போனதால் அதிருப்தியாகிவிட்டார்.
2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், அ.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.க.வுக்கு தாவிவந்தவர் சாரதி. இவருக்கு கட்சியில் அமைச்சர் காந்தி முக்கியத்துவம் தந்தார். வந்த கொஞ்ச காலத்திலேயே அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகனும் இவரும் ஒரே சாதி என்பதால் அவரின் ஆதரவாளராக மாறினார். உட்கட்சி தேர்தலின்போது அவரின் சிபாரிசின்படி கட்சியில் மாவட்ட பொருளாளர் பதவி தந்தார் காந்தி. அப்போது, கட்சிக்காக உழைத்தும் மாவட்ட பதவிகளுக்கு வரமுடியாத சீனியர்கள் பலர் அதிருப்தியடைந்தனர். அதனை அமைச்சர் காந்தி கண்டுகொள்ளவில்லை.
2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது, அரக்கோணம் தொகுதியில் போட்டியிட எம்.பி ஜெகத்ரட்சகன், அமைச்சர் காந்தி மகனான சுற்றுச்சூழல் அணியின் மாநில துணைச்செயலாளர் வினோத்காந்தி இருவரும் தலைமையிடம் சீட் கேட்டனர். ராணிப்பேட்டை கட்சி நிர்வாகிகள் 58 பேர் காந்தி மகன் வினோத் காந்திக்கு பணம் கட்டினர். அப்போது தனக்கு சீட் வேண்டுமென தலைமை யிடம் பணம் கட்டி அமைச்சர் காந்திக்கே அதிர்ச்சி தந்தார் சாரதி. இதுபோன்ற காரணங்களால் சாரதியை காந்தி ஒதுக்க ஆரம்பித்ததும், சாதி ரீதியாக ஜெகத்ரட்சகன், பொதுச்செயலாளர் துரைமுருகன், வேலூர் எம்.பி. கதிர்ஆனந்தோடு படுநெருக்க மானார்.
கடந்த ஜனவரி மாதம் கதிர்ஆனந்த் பிறந்தநாளுக்கு ஆயிரக்கணக்கானவர்களுக்கு பிரியாணி ஸ்பான்சர் செய்து அவரின் மனதில் இடம்பிடித்தார். அதேபோல் கதிர்ஆனந்தின் அரசியல் போட்டியாளரான, வேலூர் மா.செ. நந்தகுமார் எம்.எல்.ஏ.வோடும் நட்பு பாராட்டி னார். தனது அமைச்சர் பதவிக்கு குறிவைக்கும் நந்தகுமார், சாரதிக்கு கொம்பு சீவி விடுவது காந்திக்கு டென்ஷனை உருவாக்கியது. இந்நிலையில், அமைச்சர் காந்தியின் சிபாரிசு இல்லாமல் வேலூர் மாவட்டம் காட்பாடி யிலுள்ள வள்ளிமலை பாலசுப்பிரமணி கோவில் அறங்காவலர் குழுவின் தலைவர் பதவியை சாரதிக்கு துரைமுருகன் தந்துள்ளார்.
இதற்கு முன்பு இந்த கோவில் அறங்காவலர் குழுவின் தலைவர் பதவியை, இதேபோல் காந்தியை எதிர்த்து அரசியல் செய்த ராணிப்பேட்டை சேர்மனாக இருந்த குட்டி. கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கினார் துரை முருகன். காட்பாடி, பொன்னையில் தி.மு.க. நிர்வாகிகள் இல்லாதது போல், ராணிப் பேட்டை மாவட்டத்தில் காந்தியை எதிர்ப்பவர் களுக்கு பதவி தந்து சப்போர்ட் செய்வது எந்த விதத்தில் சரியெனத் தெரியவில்லை'' என்கிறார்கள்.
ராணிப்பேட்டையை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் சிலர், "ஆற்காடு, காஞ்சிபுரத் திலுள்ள தனது சட்டவிரோதக் குவாரிகளை காப்பாற்றிக்கொள்ளவே தி.மு.க.வில் இணைந்து அமைச்சர் காந்தியுடன் வலம்வந்தார் சாரதி. ஆற்காடு எம்.எல்.ஏ.வும், மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான ஈஸ்வரப்பனுக்கு செக் வைக்க சாரதிக்கு முக்கியத்துவம் தந்தார் காந்தி. இப்போது அமைச்சர் காந்திக்கே செக் வைக்கும் அளவுக்கு கட்சியில் தனக்கான ஆதரவு வட்டத்தை தலைமை வரை உரு வாக்கிவிட்டார். கடந்த பிப்ரவரி மாதம் சாரதி யின் பிறந்த நாளுக்கு அவரது வீட்டுக்கு துரை முருகன், ஜெகத்ரட்சகன், நந்தகுமார் சென்றது காந்தி தரப்பை மட்டுமல்ல, கட்சி நிர்வாகிகளையும் கூட அதிர்ச்சியடையச் செய்துள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆற்காடு தொகுதியில் எம்.எல்.ஏ. சீட் கேட்கும் முடிவில் கட்சியில் காய்நகர்த்துகிறார் சாரதி.
மாவட்டம் பிரிக்கப்பட்டால் மா.செ. பதவி வாங்க வேண்டுமென நினைக்கிறார். இவரெல்லாம் தி.மு.க. ஆட்சி மாறி, அ.தி.மு.க. வோ அல்லது வேறு எந்த கட்சியோ ஆட்சிக்கு வந்தாலும் அங்கே ஓடிவிடுவார். அ.தி.மு.க. விலிருந்து தி.மு.க.வுக்கு வந்த எத்தனையோ பேர் மா.செ.க்களாக, எம்.எல்.ஏ.க் களாக, அமைச்சர் களாக இருக்கிறார்கள்.
இவரை நம்ப வேண்டாம் எனச் சொல்வதன் காரணமே, வந்த வேகத்திலேயே சாதி அரசியல் செய்து மாவட்டக் கழகத்தில் முக்கிய பதவியைப் பிடித்ததால்தான், கட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளிலேயே எம்.பி. சீட் கேட்கிறார். அவரின் நோக்கம் தெரியாமல், காந்தியை பிடிக்கவில்லை என்பதற்காக கட்சி சீனியர்களே இவரை முன்னிலைப்படுத்துவது சரியல்ல'' என்கிறார்கள்.
"சாரதியிடம் பணம் உள்ளது, வாரி வழங்குகிறார் என அவருக்கு சப்போர்ட் செய்கிறார்கள். பணம் மட்டுமே கட்சியில் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் என்றால் கட்சியில் உழைக்கும் நாங்கள் வேண் டாமா? உழைப்புக்கும், சீனியாரிட் டிக்கும் மதிப்பு என்ன?'' எனக் கேள்வி யெழுப்புகின்றனர் லோக்கல் உ.பி.க்கள்.
இதுகுறித்து நாம் விளக்கம் பெறுவதற்காக ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. பொருளாளர் சாரதியின் மொபைல் எண்ணுக்கு தொடர்புகொண்டபோது, நமது லைனை அவர் எடுக்கவில்லை.